Site icon Tamil News

அணுவாயுதப் பேரழிவை நெருங்கும் உலகம் – வெளியான அதிர்ச்சி தகவல்

உலகம் அணுசக்திப் பேரழிவு ஒன்றை நெருங்கி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் வெளியாகின்ற நூற்றுக்கு மேற்பட்ட மருத்துவ சஞ்சிகைகளின் ஆசிரிய பீடங்களின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கின்ற ஓரு கூட்டறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலிருந்து அணு ஆயுதங்கள் அனைத்தையும் அழித்தொழித்து விடுமாறு அந்த அறிக்கையில் பகிரங்க வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது

ஜப்பானின் ஹீரோசீமா நகரம் மீது அமெரிக்கா நடத்திய முதலாவது சிவிலியன்கள் மீதான அணு குண்டுத் தாக்குதலின் 68 ஆவது ஆண்டு நிறைவு நாள் நேற்று நினைவுகூரப்பட்டது. அந்த சமயத்திலேயே அடுத்த அணு ஆயுதத் தாக்குதல் ஒன்று குறித்த இந்த அச்சம் வெளியிடப்பட்டிருக்கிறது.

பிஎம்ஜே(BMJ) , லான்செட் (Lancet) , ஜேஏஎம்ஏ (JAMA ) நியூ இங்கிலன்ட் ஜேர்னல் ஒஃப் மெடிசின் ஆகியன உட்பட உலகின் மதிப்பு மிகுந்த பதிப்புகள் அடங்கலாக நூற்றுக்கு மேற்பட்ட மருத்துவ சஞ்சிகைகளில் சமகாலத்தில் வியாழக்கிழமை வெளியாகியுள்ள ஆசிரிய தலையங்கங்களில் “அணு ஆயுதத் தாக்குதல் அச்சுறுத்தல் மிக குறிப்பிடக் கூடிய அளவுக்கு நெருங்கி வருவதாக” சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி புட்டின் அவ்வப்போது சாடைமாடையாக வெளியிட்டுவருகின்ற அணு ஆயுதத் தாக்குதல் மிரட்டல்கள், வட கொரியா அணு ஏவுகணைகளை அடிக்கடிச் சோதித்து வருகின்றமை, மற்றும் அணுப் பரவல் தடை உடன்படிக்கைக்கு குறுக்கே போடப்பட்டிருக்கின்ற தடைகள் போன்ற நிலைமைகளைச் சுட்டிக்காட்டுகின்ற அந்த அறிக்கை, அணு ஆயுதங்கள் எங்களை அழித்தொழிப்பதற்கு முன்பாக அவற்றை வைத்திருக்கின்ற நாடுகள் அவை அனைத்தையும் முற்றாக ஒழித்துவிட வேண்டும் – என்று கேட்டுள்ளது.

பொதுவாக மருத்துவக் கண்டுபிடிப்புகள் தொடர்பான பிரத்தியேக செய்திகளை முந்திக் கொண்டு வெளியிடுவதற்காகப் போட்டி போடுகின்ற இந்த மருத்துவ சஞ்சிகைகள் ஒரு பொதுநோக்கத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்துள்ளமை ஒரு நல்ல முன்னேற்றம் – என்று உலக மருத்துவப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த கிறிஸ் ஷெய்லின்ஸ்கி (Chris Zielinski) தெரிவித்துள்ளார்.

இந்த முன்னணி மருத்துவ சஞ்சிகைகள் அனைத்தும் ஒரே தலையங்கத்தை வெளியிட ஒப்புக்கொண்டிருப்பது தற்போதைய அணுசக்தி நெருக்கடியின் அவசர நிலைமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது,” – என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

Exit mobile version