Site icon Tamil News

நேப்பாளத்தில் கிராமம் ஒன்றை புரட்டிப்போட்ட வெள்ளம்

நேப்பாளத்தில் குளிரில் உறைந்துபோன வெள்ள நீர், வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 16) ஒரு கிராமத்தைக் கிட்டத்தட்ட மூழ்கடித்துள்ளது.

நேப்பாளத்தின் எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் கிராமத்தில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது என்று உள்ளூர் அரசாங்க, ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். பனிக்கட்டி ஏரியிலிருந்து வெளியான உருகிய நீரால் இந்நிலை ஏற்பட்டிருக்கக்கூடும் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர்.

இச்சம்பவத்தில் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை. எனினும், தேம் என்ற அந்த கிராமத்தைச் சூழ்ந்த சேற்றுடன் கலந்த பழுப்பு நிற நீரின் அளவு அதிர்ச்சி தரும் வகையில் அமைந்தது. உள்ளூர் அதிகாரிகள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்த காணொளிகளில் இது தெரிந்தது.

தேம், திபெத்தைச் சேர்ந்த ‌ஷெர்ப்பா மக்கள் வசிக்கும் கிராமமாகும். அது, ஏறக்குறைய 3,800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.அந்தச் சிறிய கிராமம், பல சாதனைகளைப் படைத்துள்ள மலையேறிகள் வசிக்கும் பகுதியாகும். வரலாறு காணாத வகையில் 30வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய காமி ரிட்டா ‌ஷெர்ப்பாவும் அவர்களில் ஒருவர். காமி ரிட்டா ‌ஷெர்ப்பா, கடைசியாக இவ்வாண்டு எவரெஸ்ட்டை ஏறினார்.

“உயிர் சேதம் இருந்ததாகத் தகவல் இல்லை. ஆனால், வெள்ளத்தில் 15 வீடுகள் கொண்டு செல்லப்பட்டன,” என்று நேப்பாள ராணுவப் பேச்சாளர் கெளரவ் குமார் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார். பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புக் குழுக்கள், மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்க உதவி வருவதாகவும் அவர் சொன்னார்.

பருவநிலை மாற்றத்தால் இமய மலைப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் அதிர்ச்சி தரும் வேகத்தில் உருகுகின்றன அதனால் எதிர்பாரா வேளைகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பேரிடர்களை சமூகங்கள் எதிர்நோக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

Exit mobile version