Site icon Tamil News

ஒரு கொலையை மறைக்க 76 பேரின் உயிரைப் பறித்த வாலிபர்!- கைது செய்த பொலிஸார்

தென்னாப்பிரிக்காவில் ஒரு கொலையை மறைப்பதற்காக தீ விபத்தை ஏற்படுத்தி 76 பேரின் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பெர்க் நகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நள்ளிரவில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 12 குழந்தைகள் உட்பட 76 பேர் உயிரிழந்ததோடு, 120 பேர் படுகாயம் அடைந்தனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த இந்த சம்பவம் தொடர்பாக, விபத்து என பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது.

தான்சானியாவைச் சேர்ந்த 29 வயது நபர் ஒருவர் அந்த கட்டிடத்தில் வாழ்ந்து வந்துள்ளார். அவர் வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்து உள்ளூரில் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவ்வாறு வியாபாரம் செய்து வந்ததில் அவருக்கும், மற்றொருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அந்த நபரை அழைத்து வந்து அடித்து துன்புறுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த நபர் உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போதைப் பொருள் வியாபாரி அந்த நபரின் உடலை மறைப்பதற்காக பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது காற்று அதிகமாக வீசியதால், தீ மளமளவென அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த விபத்தில் தான் 76 பேர் உயிரிழந்ததோடு, 120-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். பொலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக அந்த நபரை நேற்று கைது செய்து விசாரித்த போது, இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அவரது பெயர் மற்றும் அடையாளம் ஆகியவற்றை வெளியிட போலீஸார் மறுத்துள்ளனர். உரிய விசாரணை நடத்தப்பட்டு ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டப் பிறகு அவர் யார் என்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 76 பேரை கொலை செய்தது, 120க்கும் மேற்பட்டோரை கொலை செய்ய முயற்சித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள், அந்த நபர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக தென்னாப்பிரிக்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version