Site icon Tamil News

நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் எடுத்த திடீர் தீர்மானம்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக வில்லியம்சன் அறிவித்துள்ளார்.

அதோடு, கிரிக்கெட் வாரியத்துடனான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இனி நியூசிலாந்து அணிக்காக பெரும்பாலும் வில்லியம்சன் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்பார் என கருதப்படுகிறது. ஐசிசியின் நடப்பு டி20 உலகக் கோப்பையில் லீக் சுற்றிலேயே நியூசிலாந்து அணி வெளியேறிய நிலையில், வில்லியம்சன் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக, டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணியின் மற்றொரு வேகப்ந்து வீச்சாளரான டிரென்ட் போல்ட்டும் அண்மையில் விலகியது குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்தத்தில் இருந்து விலகினாலும், தேசத்திற்கான மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலு தொடர்ந்து விளையாடுவேன் என வில்லியம் வாக்குறுதி அளித்துள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, கிறிஸ்துமஸிற்கு முன்பாக பட்டியலிடப்பட்டுள்ள 8 டெஸ்ட் போட்டிகள் மற்றும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஆகிய போட்டிகளிலும் வில்லியம்சன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் வாரியங்கள் உடனான மத்திய ஒப்பந்தம் கிரிக்கெட் வீரர்களுக்கு நிலையான வருமானத்தை உறுதி செய்கிறது. அதேநேரம், உடற்தகுதியுடன் இருந்தால் நிர்வாகம் விரும்பும் அனைத்து போட்டிகளிலும், அந்த வீரர்கள் பங்கேற்க வேண்டியது இருக்கும். அதேநேரம், மத்திய ஒப்பந்தத்தில் இல்லாவிட்டாலும், தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்த முடியும். அதே நேரத்தில் நிர்வாகம் வலியுறுத்தும் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதனால், சுதந்திரமாக பல வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாடி வருவாய் ஈட்ட முடியும்.

33 வயதான வில்லியம்சன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, நியூசிலாந்து கிரிக்கெட்டில் அணியில் ஒரு முக்கிய நபராக இருந்து வருகிறார். பல ஆண்டுகளாக தனது அணியின் வெற்றிக்கு பெரும் பங்களித்து வருகிறார். அவர் விளையாடிய பத்து உலகக் கோப்பைகளில் ஏழில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 2011 முதல் ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இரண்டு விதமான போட்டிகளிலும் வில்லியம்சன் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் ஒப்பந்த்தில் இருந்து விலகி, கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தோனிக்கு பிறகு மிகவும் சாந்தமான கேப்டன் என்ற முறையில், வில்லியம்சன்னிற்கு இந்தியாவிலும் பெரும் ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version