Site icon Tamil News

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மூத்த மீட்புப் பணியாளர் ஒருவர் பலி

பாலஸ்தீன நகரான ஜபாலியாவில் வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் முகம்மது மொர்சி எனும் மூத்த மீட்புப் பணியாளர் கொல்லப்பட்டார் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஸா குடிமை அவசரச் சேவையின் துணை இயக்குநரான அவரோடு அவரின் குடும்பத்தினர் நால்வர் கொல்லப்பட்டதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

மொர்சி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஸா போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலியத் தாக்குதல்களால் கொல்லப்பட்ட தங்கள் உறுப்பினர்களின் எண்ணிக்கை 83க்கு அதிகரித்துள்ளதாகக் குடிமை அவசரச் சேவை, அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. மொர்சியின் மரணம் குறித்து இஸ்ரேல் உடனடியாகத் தகவல் ஏதும் வெளியிடவில்லை.

இதற்கிடையே, ஜோர்தானிலிருந்து ஒருவர் எல்லையைக் கடந்து இஸ்ரேலிய பொதுமக்கள் மூவரைக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 8) ஏலன்பி பாலம் எல்லைப் பகுதியில் அச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் தாக்குதல்காரரைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றதாகவும் இஸ்ரேலிய அதிகாரிகள் கூறினர்.

சென்ற ஆண்டு அக்டோபர் ஏழாம் திகதிக்குப் பிறகு இஸ்ரேல்-ஜோர்தான் எல்லையில் இதுபோன்ற தாக்குதல் நிகழ்ந்தது இதுவே முதல்முறையாகும். அன்றைய தினம்தான் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பு, மெற்கு இஸ்ரேலில் தாக்குதல் மேற்கொண்டது. அதனையடுத்து காஸா போர் மூண்டது.

அந்தப் போர் இப்போது அவ்வட்டாரத்தின் இதர சில பகுதிகளுக்கும் பரவியுள்ளது.

Exit mobile version