Site icon Tamil News

ஒருவருக்கு ஏற்படும் உளவியல் நோய் – கண்டுபிடிப்பது எப்படி? அறிந்திருக்க வேண்டியவை

உடல் நலத்தில் ஏதேனும் சிககல் ஏற்பட்டால் உடலில் தென்படும் அறிகுறிகளை அடிப்படையாகக்கொண்டு சிகிச்சை பெற்றுவிடலாம். ஆனால் உளவியல்நோய் அப்படிப்பட்டதல்ல. நீண்ட காலம் வெளியே தெரியாது. தாமதமாக தெரிய வரும்போது முழுமையான சிகிச்சை பெற முடியாது.

மனக்கவலைகள் ஏற்பட்டால் அதில் இருந்து விரைவாகவே மீண்டு வந்துவிடவேண்டும். சில அறிகுறிகள் தென்படும்போதே எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அத்தகைய அறிகுறிகள் குறித்து பார்ப்போம்.

பசியின்மை, தூக்கமின்மை போன்றவை ஏற்பட்டால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அவை மன நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இரண்டு வாரங்களுக்கு மேல் அந்த பிரச்சினைகள் தொடர்ந்தால் நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள்.

அது மன அழுத்தத்தை குறைக்க வழி வகை செய்யும். ஒருவருடைய நடவடிக்கையில் திடீரென்று மாற்றங்கள் ஏற்படுவது நல்ல மன ஆரோக்கியத்திற்கான வெளிப்பாடு அல்ல. உங்களுக்கு நெருக்கமான ஒருவர் வழக்கத்தை மீறி உணர்ச்சி வசப்பட்டாலோ, மனச்சோர்வு அடைந்தாலோ, திடீர் மாற்றங்களை வெளிப்படுத்தினாலோ அவை உளவியல் நோய்க்கான ஆரம்பக்கட்ட அறிகுறியாக இருக்கலாம்.

விளையாட்டில் தோல்வி, தேர்வில் தோல்வி, வகுப்பில் கவனம் செலுத்தாமல் இருத்தல், பிடித்தமான செயல்களில் கூட ஆர்வம் இல்லாமல் இருத்தல் போன்றவை மன ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்களாகும்.

அதில் இருந்து விடுபடாமல் அது சார்ந்த சிந்தனையில் மூழ்கும்போது மன அழுத்தம் தோன்றி அது மன நோயாக மாறக்கூடும். வழக்கமான நடவடிக்கைகளில் அசாதாரண மாற்றங்கள் நிகழ்வதும் மன நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். மன நோய் பாதிப்புக்குள்ளாகுபவர்கள் சிந்தித்து வேலை செய்வதும், அதில் கவனம் செலுத்துவதும் கடினம். நினைவுத்திறன், சிந்தனை திறன், பேச்சு போன்றவற்றிலும் சிக்கல் நேரும்.

நெருங்கி பழகுபவர்கள், உங்கள் நலனில் அக்கறை காட்டுபவர்களை விட்டு விலகி இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதும் உளவியல் நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். மேலும் பதற்றத்துடன் காணப்படுவது, பயப்படுவது, மற்றவர்கள் மீது தேவையில்லாமல் சந்தேகம் கொள்வது போன்றவையும் மன நோய்க்கான அறிகுறியாக கருதப்படுகிறது.

எவையாக இருந்தாலும் அதன்மீது மிகையாக நம்பிக்கை கொள்வதும், குழப்பத்திற்கு ஆளாகுவதும் மன உடல் நலத்தைப் பாதிக்கும்.

Exit mobile version