Tamil News

அமைச்சர் டக்ளஸின் சந்திப்பிற்கு செய்தி சேகரிக்க சென்ற முல்லைத்தீவு ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் டக்ளஸ் அலுவலகத்தில் இன்றையதினம் (17.04.2024) காலை அலுவலக சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் கிராமத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் அமைச்சர் உள்ளிட்ட குழுவினருக்கும் மக்களுக்கும் இடையில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. குறித்த சந்திப்பில் மக்கள் ,அமைச்சர் குழுவினரிடையே முரண்பாடு ஏற்பட்டிருந்தது. அதன்போது செய்தி சேகரிப்பதற்கு சென்றிருந்த முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் இராசையா உதயகுமார் அதனை காணொளியாக பதிவு செய்திருந்தார்.

அதன்போது அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் (MSD) காணொளி எடுக்க வேண்டாமென தடுத்ததோடு அதனை மீறி எடுத்து செய்தி பிரசுரித்தால் வீடுதேடி வருவோம் என ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.

அதனையடுத்து குறித்த விடயம் புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரிக்கு தெரியப்படுத்தபட்டதனை தொடர்ந்து அவர் அமைச்சருக்கு தெரியப்படுத்தி இருந்தார்.

பின்னர் மக்கள் சந்திப்பு முடிவடைந்து அமைச்சர் வெளியே வரும்போது வெளியில் நின்ற குறித்த ஊடகவியலாளரை பார்த்து நக்கலாக ஒரே அடிபிடி என்று கூறுங்கள் என கூறி சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version