Site icon Tamil News

ஐரோப்பாவில் இலங்கையர்களுடன் பயணித்த சொகுசு படகு கடலில் மூழ்கியது

சிசிலி கடற்கரையில் 22 பேருடன் பயணித்த 160 அடி சொகுசு படகு மூழ்கியதில் குறைந்தது ஏழு பேரைக் காணவில்லை என்று இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடலோர காவல்படை ரோந்து படகுகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மூலம் ஒரு வயது குழந்தை உட்பட 15 பேர் மீட்கப்பட்டனர்.

நியூசிலாந்து, இலங்கை, அயர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் மற்றும் இரண்டு பிரித்தானிய மற்றும் பிரஞ்சு பிரஜைகளும் படகில் இருந்தபோது விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த குழுவினர் சிசிலியில் விடுமுறையில் சுற்றுலாப் பயணிகளாக இருந்ததாகவும், படகு பிரித்தானிய கொடியின் கீழ் பயணித்ததாகவும் நம்பப்படுகிறது.

அதிகாலை ஐந்து மணியளவில் பலேர்மோவுக்கு அருகிலுள்ள போர்டிசெல்லோ கடற்கரையில் சூறாவளி தாக்கிய பின்னர் படகு மூழ்கியதாக நம்பப்படுகிறது.

இந்த படகிற்கு பேய்சியன் என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் உள்ளூர் பேஸ்புக் குழு ஒன்று சூறாவளி தாக்குவதற்கு முன்பு நங்கூரமிட்ட படகின் படத்தை பகிர்ந்துள்ளது.

மீட்கப்பட்ட குழந்தை, தாயுடன் பலேர்மோவின் குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இருவரும் நலமுடன் இருப்பதாகவும், தாய்க்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், முன்னெச்சரிக்கையாக குழந்தைக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version