Tamil News

பிரபல கேரள திருநங்கை தம்பதியர் ஐகோர்ட்டில் வழக்கு! குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் ஏற்பட்டுள்ள சிக்கல்

பிரபல திருநங்கைகளான ஜியா பவால் மற்றும் ஜஹாத். இவர்கள் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள். பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே நண்பர்கள். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த திருநங்கை தம்பதிக்கு கடந்த பெப்ரவரி மாதம் குழந்தை பிறந்தது. ஆணாக இருந்த ஜகாத் குழந்தையை வயிற்றில் சுமந்து பெற்றெடுத்தார். இதை ஜியா பவல் அறிவித்தார்.

ஆனால் அவர்களுக்கு என்ன குழந்தை உள்ளது என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் இவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு கோழிக்கோடு மாநகராட்சி மூலம் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஜியா பவாலை தந்தையாகவும், ஜஹாத் குழந்தையின் தாயாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருநங்கைகளான ஜியா பவால் மற்றும் ஜஹாத் தம்பதியினர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தாய், தந்தை என்பதற்குப் பதிலாக பெற்றோர் என்று சான்றிதழ் வழங்க கோழிக்கோடு மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குழந்தையின் தாய் பல வருடங்களுக்கு முன் தன்னை ஆணாக அடையாளப்படுத்தி சமூகத்தில் ஆணாக வாழ்ந்து வருவதால் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தந்தை மற்றும் தாயின் பெயரைத் தவிர்க்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

பெற்றோர்களாக மட்டுமே அடையாளப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அதிகாரிகள் நிராகரித்ததாகவும் தம்பதியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அதைக் கேட்ட நீதிபதி, மனுதாரர்களின் உண்மையான குறைகளைத் தீர்க்குமாறு மாநில அரசு வழக்கறிஞரிடம் கூறினார்.

ஆனால் மனுவில் சில தொழில் நுட்ட குறை பாடுகளை அரசு வக்கீல் சுட்டிக்காட்டினார். இதையடுத்து அந்த வழக்கு விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

 

Exit mobile version