Site icon Tamil News

பிரசவத்தின்போது தரையில் விழுந்த குழந்தை : அலட்சியத்தால் பறிபோன உயிர்!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாதிகளின் அலட்சியத்தால் குழந்தை தரையில் வீழ்ந்ததாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தமது சிசு இன்று (13.08) காலை உயிரிழந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அநுராதபுரம் ரவொவ கல்லஞ்சிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்திற்காக கல்லஞ்சிய வைத்தியசாலையில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

அன்றைய தினமே அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டாள். பின்னர் அவர் மகப்பேறு வார்டுக்கு அனுப்பப்பட்டார், அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஆனால், பிரசவத்தின்போது செவிலியர்களின் அலட்சியத்தால் தங்களின் குழந்தை தரையில் விழுந்ததாக அவரும் அவரது கணவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள உயிரிழந்த குழந்தையின் தாய் தக்சிலா உதயங்கனி, “தனக்கு சீக்கிரமாகவே குழந்தை பிறந்ததாகவும், இருப்பினும் தனது குழந்தையை செவிலியர்கள் கீழே தவறவிட்டதாகவும், தெரிவித்துள்ளார்.

சம்பவத்தையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட தமது குழந்தை இன்று காலை உயிரிழந்துள்ளதாக குழந்தையின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

அநுராதபுரம் வைத்தியசாலையில் இருந்து பெறப்பட்ட தாயின் நோயறிதல் குறிப்பிலும் பிரசவத்தின் போது குழந்தை தரையில் விழுந்து குழந்தையின் தலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தை பிறக்கும் போது அழவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதயக் கோளாறு காரணமாக குழந்தை உயிரிழந்ததாக இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version