Tamil News

விமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டின் குடியுரிமை கிடைக்கும்?

பொதுவாக, 36 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள், விமானத்தில் பயணிக்க விமான நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை. சில எதிர்பாராத சூழ்நிலையில், சர்வதேச விமானங்களில், 40,000 அடி உயரத்தில் குழந்தை பிறப்பது, புதிதாகப் பிறந்த குழந்தையின் குடியுரிமை பற்றிய விவாதத்திற்கு உரியதாக மாறலாம்.

இது போன்று விமானத்தில் பயணிக்கும் போது பிறக்கும் குழந்தையின் குடியுரிமையை எவ்வாறு தீர்மானிப்பது என்பதற்கு உலகளாவிய விதி எதுவும் இல்லை. சில நாடுகளில், குழந்தையின் பெற்றோரை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. சில நாடுகள், பிறந்த மண்ணின் உரிமை அடிப்படையில் கடைப்பிடிக்கின்றனர்.

பெற்றோர் எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் தனது மண்ணில் பிறந்த குழந்தைக்கு சில நாடுகள் குடியுரிமை அளிக்கின்றன. இதில் அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் அடங்கும். அமெரிக்க வான்வெளியில் பறக்கும் போது குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படலாம் என சட்டம் உள்ளது. இருப்பினும், குழந்தையின் பெற்றோர் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் நாட்டிலிருந்து வந்திருந்தால், சூழ்நிலைகளைப் பொறுத்து, குழந்தைக்கு இரட்டைக் குடியுரிமை தகுதி உள்ளது. அது சம்பந்தப்பட்ட நாடுகளைச் சார்ந்தது.

அதே நேரம், பெற்றோர் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் பிரான்ஸ் நாட்டின் வான்வெளியில், அமெரிக்க கர்ப்பிணி பெண் குழந்தை பிரசவித்ததால், தங்கள் குழந்தைக்கு பிரெஞ்சு குடியுரிமையைப் பெற முடியாது என்பதே இதன் பொருள். ஒரு வெளிநாட்டு நாட்டில் அமெரிக்க குடிமக்களுக்கு குழந்தை பிறக்கும் போது, அமெரிக்காவும் இதே முறையை பின்பற்றுவதால், குழந்தைக்கு வழக்கமான அமெரிக்க குடியுரிமை கிடைக்கும். பெற்றோர் அடிப்படையில் குடியுரிமை என்பது உலகெங்கிலும் மிகவும் பொதுவான விதியாக இருப்பதால், சர்வதேச நீர் அல்லது வெளிநாட்டு வான்வெளியில் விமானத்தில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் தங்கள் பெற்றோரின் குடியுரிமையைப் பெற வாய்ப்புள்ளது.

தாய்க்கு அதிகாரபூர்வ குடியுரிமை இல்லாத நிலை மற்றும் குழந்தை சர்வதேச வான்வெளி எல்லையில் பிறக்கும் போது, விமானம் எந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த நாட்டின் குடியுரிமையை பெறலாம். இவ்வளவு சிக்கலான சட்டங்கள் இருந்தபோதிலும், பறக்கும் விமானத்தில் குழந்தை பிறப்பது மிகவும் அரிதானவையாக உள்ளது.

சில விமான நிறுவனங்கள், விமானத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சிறப்பு சலுகைகள் கூட வழங்குகின்றன. உண்மையில், பெரும்பாலான விமான நிறுவனங்கள், விமானம் பறக்கும் போது பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையைக் கூட கண்காணிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version