Site icon Tamil News

இந்தியாவில் உயிரிழந்த 7 வயது சிறுவன்… அறுவை சிகிச்சையில் விபரீதம்!

பெங்களூருவில் தொண்டை வலிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சையின் போது அளவுக்கு அதிகமான மயக்க மருந்து கொடுத்ததால் உயிரிழந்ததாக பரபரப்பு புகார் கிளம்பியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு சம்பங்கி ராமநகரில் உள்ள தனியார் மருத்துவமனை மீது தான் இந்த புகார் எழுந்துள்ளது. தொண்டையில் புண் இருந்த மைக்கல்(7) என்ற சிறுவன் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனால் மைக்கலுக்கு அறுவை சிகிச்சை செய்ய நேற்று முடிவு செய்யப்பட்டது. அவருக்கு டாக்டர் ஸ்வேதா பாய் என்பவர் அறுவை சிகிச்சை செய்ய மயக்க மருந்து கொடுத்துள்ளார். இந்த மருந்து கொடுத்த சிறிது நேரத்திலேயே மைக்கல் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அந்த டாக்டர், மைக்கலின் பெற்றோரிடம் கூறவில்லை. அதற்கு மாறாக சிறுவன் மைக்கலுக்கு இதயக்கோளாறு இருப்பதாக கூறியுள்ளார். இதனால், மைக்கலின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதன் பேரில் அவர்கள் பொலிஸில் புகார் அளித்தனர். பரிசோதனையில் மைக்கேல் இறந்த விஷயம் தெரிய வந்தது. சிறுவன் மைக்கேல் மயக்கமடைந்த பிறகு 3 ஊசிகள் போடப்பட்டதால் அவர் அளவுக்கதிகமான மருந்தை உட்கொண்டதால் இறந்து விட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மருத்துவமனையின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், மைக்கேலின் உடலை பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தை இறந்த தகவல் அறிந்த டாக்டர் ஸ்வேதா பாய் தப்பியோடிவிட்டார். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version