ஒன்றிணைந்தது அதிமுக! சட்டமன்றத் தலைவரானார் பழனிசாமி!!
அதிமுகவில் உள்ளக மோதல் உக்கிரமடைந்ததையடுத்து தனியாக செயல்பட்ட வேலுமணி அணி, பழனிசாமி அணியுடன் மீண்டும் சங்கமித்துள்ளது.
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் சட்டமன்றக் குழு தலைவராக்க நியமிக்குமாறுகோரி, சபாநாயகரிடம் கடிதம் கையளித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றிபெற்றது. இதில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவளித்தனர்.
22 எம்எல்ஏ.க்கள் பழனிசாமிக்கு ஆதரவளித்தனர். அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக வேலுமணியை நியமிக்க 25 எம்எல்ஏ.க்களும், பழனிசாமியை நியமிக்க 22 எம்எல்ஏ.க்களும் தனித்தனியாக சபாநாயகரிடம் மனு அளித்தனர்.
இதனையடுத்து அந்த 25 எம்எல்ஏ.க்களின் கட்சிப்பதவியை பறித்து அதிரடி காட்டினார் பழனிசாமி. மேலும் அவர்கள் மீது கட்சித்தாவல் நடவடிக்கை எடுக்கவும் தயாரானார்.
இந்தச் சூழலில் வேலுமணி அணியில் இருந்த 4 எம்எல்ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
இந்நிலையில், நேற்று வேலுமணி அணியை சேர்ந்த நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பழனிசாமியுடன் பேசினர். இதனையடுத்து இன்று எஸ்.பி.வேலுமணி தரப்பினர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
இதன் காரணமாக இருதரப்ப்பிலும் நிலவிய குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.




