அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: ஒப்பந்தம் விரைவில் அறிவிக்கப்படலாம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, இரு நாடுகளின் நிலைப்பாடுகளும் ஒருங்கிணைந்து வருவதாக தெரிவித்தார். இருப்பினும், அமெரிக்கா முரண்பாடான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான அடித்தளமாக இருக்கும் “புரிந்துணர்வு ஒப்பந்தத்தை” உருவாக்கும் பணியில் ஈரான் ஈடுபட்டுள்ளதாகவும் பாகாயி கூறினார்.
இதனிடையே, ஈரானுடனான ஒப்பந்தம் “பெரும்பாலும் முடிக்கப்பட்டுவிட்டது” என்றும், அதன் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் செய்து வரும் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் டார், சமீபத்திய பேச்சுவார்த்தைகள் சாதகமான முடிவு எட்டக்கூடிய நிலையில் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, “குறிப்பிடத்தக்க முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளதாலும், இன்னும் சில பணிகள் மீதமுள்ளதாகவும் கூறினார். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதம் பெறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோரும் இந்த முன்னேற்றத்தை வரவேற்று, ஈரான் அணு ஆயுதம் பெற அனுமதிக்கப்படக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.





