ரஷ்யாவின் மிகப்பெரிய ஏவுகணை தாக்குதல் – கீவ் உட்பட பல பகுதிகள் கடும் சேதம்
ரஷ்யா, உக்ரைன் மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் பல ஏவுகணைகளை ஏவி பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளது.
தலைநகர் கீவ் முக்கிய இலக்காக இருந்ததாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், சுமார் 83 பேர் காயமடைந்துள்ளனர். குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பாடசாலைகளும் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல்கள், உக்ரைன் பொதுமக்கள் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இதில் “ஒரெஷ்னிக்” ஹைப்பர்சோனிக் ஏவுகணையும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஸ்டாரோபில்ஸ்க் பகுதியில் மாணவர் விடுதியில் நடந்த தாக்குதலில் 21 பேர் உயிரிழந்ததற்கு உக்ரைனே காரணம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குற்றம் சுமத்தியுள்ளார். ஆனால், அந்த தாக்குதல் உயர்மட்ட ரஷ்ய இராணுவ பிரிவை இலக்குவைத்ததாக உக்ரைன் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
மேலும், ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் பயணிக்கும் “ஒரெஷ்னிக்” ஏவுகணையை ரஷ்யா மீண்டும் பயன்படுத்தியிருக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்த ஏவுகணை அணு ஆயுதங்களையும் சுமக்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஷ்யா மீது சர்வதேச அழுத்தத்தை அதிகரிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் அடுத்த வாரம் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




