காங்கோவில் எபோலா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த கூடாரங்களுக்கு தீ வைப்பு!
காங்கோவில் எபோலா தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில், நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வந்த கூடாரம் ஒன்று நேற்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
தீ விபத்தை தொடர்ந்து அங்கு சிகிச்சைப் பெற்று வந்த 18 நோயாளிகள் வெளியேறியுள்ளனர்.
நோயாளிகள் சிகிச்சைப் பெறும் கூடாரங்கள் தீக்கிரையாக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
அதிக தொற்றுத்தன்மை கொண்ட எபோலா நோயாளிகளின் உடல்களைக் கையாள்வதற்கான கடுமையான நெறிமுறைகள் காரணமாக, சுகாதாரப் பணியாளர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறான சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நெறிமுறைகள் பாரம்பரிய அடக்கச் சடங்குகளைத் தடுக்கின்றன.
அரிய வகை புண்டிபுக்யோ வைரஸ் பரவல் காரணமாக, உலக சுகாதார அமைப்பு காங்கோவிற்கான அபாய நிலையை ‘மிக அதிகம்’ என உயர்த்தியுள்ளது.
அங்கு 82 நோய்த்தொற்றுகளும் 07 இறப்புகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




