பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த நபர் உயிரிழப்பு – மட்டக்களப்பில் சம்பவம்!
மட்டக்களப்பில் பொலிஸாரின் தடுப்புக்காவலில் இருந்த நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கரடியனாறு, கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய சுப்பையா வசந்தகுமார் என அடையளாம் காணப்பட்டுள்ளார்.
மதுபோதைக்கு அடிமையான குறித்த நபர் வீட்டில் அடிக்கடி தகறாரில் ஈடுபடுவதாக தெரியவருகிறது. இதனைத் தொடர்ந்து மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
மேற்படி முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் அவரை கைது செய்து தடுப்புக்காவலில் வைத்திருந்துள்ளனர். இதன்போது அவர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
எனினும், குறித்த நபர் பொலிஸாரால் தாக்கப்பட்டே உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்தவரின் தலையின் பின்புறத்தில் இரத்தக் கசிவு காணப்படுவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பேரில், வவுணதீவு பொலிஸ் குழுவொன்று கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.




