ஆஸ்திரேலியாவில் பிரதான கட்சிகளுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ள ‘சிறு கட்சி’!
ஆஸ்திரேலியாவில் தற்போதைய சூழலில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டால், வலதுசாரி கொள்கையுடைய பாலின் ஹான்சனின் One Nation கட்சி நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுக்கும் என புதிய கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
பாரம்பரிய எதிர்க்கட்சிக் கூட்டணியான லிபரல் மற்றும் நேஷனல் கட்சிகள் முழுமையாகத் துடைத்தெறியப்படும் துடைத்தெறியப்படக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரெட்பிரிட்ஜ் குரூப் மற்றும் ஆக்சென்ட் ரிசர்ச் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 6,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களிடம் நடத்திய ஆய்வை அடிப்படையாகக் கொண்டே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் ஒரு இடத்தைக்கூட நேரடியாக வென்றிராத One Nation கட்சி, ஆளும் லேபர் கட்சியின் கோட்டைகள் உட்பட பல தொகுதிகளைக் கைப்பற்றி 46 முதல் 59 இடங்கள் வரை (சராசரியாக 53 இடங்கள்) வெல்லக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பிரதான எதிர்க்கட்சிக் கூட்டணி வெறும் 7 முதல் 21 இடங்களுக்குள் சுருங்கும் எனத் தெரிகிறது. இதில் லிபரல் கட்சி 12 இடங்களை மட்டுமே பெறும் என்றும், நேஷனல் கட்சி ஒரு இடத்தில்கூட வெல்லாது என்றும் சராசரி கணிப்புகள் கூறுகின்றன.
பிரதமர் Anthony Albanese தலைமையிலான லேபர் கட்சி 70 முதல் 82 இடங்கள் வரை வென்று, மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் அல்லது சிறுபான்மை அரசாங்கமாக ஆட்சியைத் தக்கவைக்க வாய்ப்புள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட அரசியல் ஆய்வாளர் Sean Radcliffe,
“ஆஸ்திரேலிய மக்கள் இவ்வாறு வாக்களித்தால், அது நாட்டின் பாரம்பரிய இரு கட்சி முறையையே முற்றிலும் ஒழித்துவிடும்” என்று எச்சரித்துள்ளார்.
இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மெல்போர்னில் நடைபெற்ற லிபரல் கட்சி மாநாட்டில் அக்கட்சியின் மூத்த தலைவர் அங்கஸ் டெய்லர் உரையாற்றினார்.
“வாக்குகள் சிதறினால், லேபர் கட்சியே மீண்டும் ஆட்சியில் அமரும். எனவே, லேபர் கட்சி அரசாங்கத்தை வீழ்த்த ஆதரவாளர்களையும் உறுப்பினர்களையும் லிபரல் கட்சியில் சேர்க்க இதைவிடச் சிறந்த தருணம் வேறு இல்லை.
அனைவரும் உடனடியாகக் களமிறங்கிப் பணியாற்ற வேண்டும்” என்று தொண்டர்களுக்கு அங்கஸ் டெய்லர் அவசர அழைப்பு விடுத்தார்.




