Site icon Tamil News

வங்காளதேச கிரிக்கெட் வீரர் உள்பட 8 பேர் மீது சூதாட்ட குற்றச்சாட்டு

அபுதாபி 10 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அமீரகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 2021-ம் ஆண்டு நடந்த டி10 லீக்கில் பெரிய அளவில் முறைகேடு நடந்தது அம்பலமாகியுள்ளது.

ஆட்டத்தை முன்கூட்டியே நிர்ணயம் செய்ய முயற்சி (மேட்ச் பிக்சிங்), ரகசிய தகவல் பரிமாற்றம், சூதாட்டம் நோக்கில் சந்தேக நபர்கள் அணுகியதை தெரிவிக்காதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் புனே டெவில்ஸ் அணியின் இணை உரிமையாளர்களான இந்தியாவின் கிரிஷன் குமார் சவுத்ரி, பராக் சங்வி, உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் ரிஸ்வான் ஜாவித், சலியா சமன், பேட்டிங் பயிற்சியாளர் அசார் ஜாய்தி, உதவி பயிற்சியாளர் சன்னி தில்லான், அணி மேலாளர் ஷதப் அகமத் மற்றும் வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் நசிர் ஹூசைன் ஆகியோர் சிக்கியுள்ளனர்.

கடைசியாக 2021-ம் ஆண்டு தொடரில் பங்கேற்ற புனே டெவில்ஸ் அணி 6 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டிருந்தது.

31 வயதான நசிர் ஹூசைன் வங்காளதேச அணிக்காக 19 டெஸ்ட் மற்றும் 65 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

அவர் சந்தேகத்துக்குரிய நபரிடம் இருந்து பெற்ற விலைஉயர்ந்த பரிசுப்பொருள் விவரத்தை மறைத்து ஊழல் தடுப்பு விதியை மீறியதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) குற்றம் சுமத்தியுள்ளது.

அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Exit mobile version