Site icon Tamil News

திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி 75வயது மூதாட்டியிடம் மோசடி; 2 வாலிபர்கள் கைது

மும்பை மாட்டுங்கா பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சமூக வலைதளம் மூலம் ஆசாமி ஒருவர் தன்னை ஜெர்மனியை சேர்ந்தவர் என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். மூதாட்டியும் அது மோசடி ஆசாமி என தெரியாமல் பேசி வந்துள்ளார்.

ஒருநாள் அந்த நபர் மூதாட்டியை திருமணம் செய்ய விரும்புவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதில் மூதாட்டி மயங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் சமீபத்தில் மூதாட்டிக்கு விலை உயர்ந்த அன்பளிப்பை அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார். பின்னர் அவர் கூட்டாளியை வைத்து சுங்க துறை அதிகாரி போல மூதாட்டியிடம் பேச வைத்தார். அந்த நபர் மூதாட்டியின் வெளிநாட்டு நண்பர் அனுப்பிய விலை உயர்ந்த அன்பளிப்புக்கு ரூ.3.85 லட்சம் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். மூதாட்டியும் மோசடி நடப்பது தெரியாமல் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பினார்.

இந்தநிலையில் 8 நாட்களுக்கு பிறகு மோசடி ஆசாமி மீண்டும் மூதாட்டியை தொடர்பு கொண்டு . அவர் மூதாட்டியை பார்க்க லண்டனில் இருந்து டெல்லி வந்ததாகவும், அதிகளவு வெளிநாட்டு பணம் இருந்ததால் சுங்க அதிகாரிகள் தன்னை பிடித்து வைத்து இருப்பதாக தெரிவித்தார். சுங்க அதிகாரிகள் காவலில் இருந்து வெளியே வர அவர்களுக்கு ரூ.8.78 லட்சம் வரி செலுத்த வேண்டும் என கூறினார். இதையும் உண்மையென நம்பி அவர் கூறிய வங்கி கணக்குகளுக்கு மூதாட்டி பணத்தை அனுப்பினார். அதன்பிறகு மூதாட்டியால் சமூகவலைதள வெளிநாட்டு நண்பரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி சம்பவம் குறித்து மாட்டுங்கா பொலிஸில் புகார் அளித்துள்ளார்ர். புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியை சேர்ந்த தின்கோ (26), சோலன் (22) ஆகியோர் மூதாட்டியிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், உள்ளூர் பொலிஸாரின் உதவியுடன் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களை மும்பை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Exit mobile version