Site icon Tamil News

மனதளவில் திடமாக இருப்பவர்களின் 6 ரகசியங்கள்!

சில பேர் தன் வாழ்நாளில் எவ்வளவு அடிகளை வாங்கினாலும் விழாமல் திடமாகவே நிற்பார்கள். சில பேருக்கு அவர்களைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கும். எப்படி இவர்கள் மட்டும் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதைக் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து தன் வேலைகளைப் பார்க்கிறார்கள் என்று. உண்மையில் சொல்லப்போனால் அவர்கள் ஏதோ ஒரு பெரிய அடியிலிருந்துதான், விழாமல் திடமாக நிற்பது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டிருப்பார்கள். எனவே இப்பதிவில் மனதளவில் திடமாக இருப்பவர்கள் எப்படி இருப்பார்கள்? என்பதைப் பார்ப்போம்.

1. கடந்து சென்றுவிடுவார்கள்: இவர்கள் மனது சொல்வதைக் கேட்காமல், மூளை சொல்வதையும் கேட்டு அந்த விஷயங்களையும் மனிதர்களையும் கடந்துச் செல்வார்கள். எந்த உறவும் வேண்டுமென்று அடம்பிடிக்காமல் மற்றவர்களிடம் கெஞ்சாமல் அதனைக் கடந்துச் சென்றுவிடுவார்கள். அந்த உறவு வேண்டுமென்பதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டே இருக்க விரும்ப மாட்டார்கள். ‘வருவது வரட்டும், செல்வதும் செல்லட்டும்’ என்பதே அவர்களின் தத்துவமாக இருக்கும்.

2. மாற்றங்களை வரவேற்பார்கள்: சாதாரணமாக ஒரு பெரிய மாற்றம் வந்தாலே அதனைப் பழகிக்கொள்ளும் வரை அது ஒரு சவாலாகத்தான் இருக்கும். எப்போதும் அவர்கள் மாற்றங்களை வரவேற்கத் தயாராக இருப்பார்கள். அதேபோல் சவால்களை சுவாரசியங்களாக எண்ணித் துணிந்து செய்வார்கள்.

3. ஆனந்தமாக இருப்பார்கள்: சந்தோசமாக இருப்பதெல்லாம் வரமும் இல்லை, சாபமும் இல்லை. அது உங்களை முன்னோக்கி அனுப்பும் ஒரு கருவியே ஆகும். அவர்கள் கையை விட்டுப் போகும் எந்த விஷயங்களுக்காகவும் தங்களது சந்தோசத்தை விட்டுத் தரமாட்டார்கள். ஆனால், போவதை கைக்குள் வைக்க நினைபவர்கள், அனைத்தையுமே இழந்து விடுவார்கள்.

4. பேச பயப்படமாட்டார்கள்: அவர்கள் கருணையாகவும் பண்பாகவும் இருப்பார்கள். அதேபோல் யாரிடம் என்ன பேச வேண்டுமென்பதைத் தெரிந்து வைத்து பயமில்லாமல் கண்களைப் பார்த்துத் தெளிவாகப் பேசுவார்கள்.

5. ஆபத்துகளை கணித்தபின்னே முடிவெடுப்பார்கள்: ஒரு ஆபத்தை எப்படிக் கடக்க வேண்டுமென்று திட்டம் செய்த பிறகே, அதனைக் கடந்து செல்லத் துணிவார்கள். முக்கால் வாசி ஆபத்துக்களைத் தவிர்க்காமல், தள்ளிப்போடாமல் கடந்து போவது எப்படி என்றே யோசிப்பார்கள். அதேபோல் தேவையில்லாமல் ஒரு ஆபத்திற்குள் செல்லமாட்டார்கள்.

6. மற்றவர்களின் சாதனையைக் கொண்டாடுவார்கள்: ஒரு குறிப்பிட்ட நபருக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்றாலும், அந்த நபர் வெற்றி பெற்றால் கொண்டாடுவார்கள். வெற்றிகளைக் கண்டு பொறாமைப்படவோ அல்லது ஆத்திரப்படவோ மாட்டார்கள்.

இந்த ஆறு ரகசியங்களால் மட்டுமே அவர்கள் எப்போதும் மனதளவில் திடமாக இருக்கிறார்கள்.

Thank you – Kalki

 

Exit mobile version