Site icon Tamil News

இலங்கையில் 59 சுகாதார வைத்திய வலயங்கள் அதி அவதானத்துக்குள்!

இலங்கையில் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழையுடனான காலநிலை தொடர்வதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள 370 சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயங்களில் 59 அலுவலகங்கள் அதி அவதானத்துக்குரிய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

ஆகவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் செயற்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தார்.

“கடந்த ஜனவரி மாதம் முதல் நிறைவடைந்த காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 35,675 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள்.

மே மாதம் முதலாம் திகதியில் இருந்து நேற்று முன்தினம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் 5967 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அதிக நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். இதற்கமைய, மேல் மாகாணம் டெங்கு நோய் தீவிரமாக பரவும் அவதானமிக்க மாகாணமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டம், வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டம் ஆகிய பகுதிகளில் டெங்கு நோய் பரவல் தன்மை தீவிரமடைந்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள 370 சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயங்களில் 59 காரியாலயங்கள் அதி அவதானத்துக்குரிய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

சுற்றுப்புற சூழலில் நீர் தேங்கியிருக்காத வகையில் சூழலை பாதுகாப்பாக வைத்திருக்க பொதுமக்கள் பொறுப்புடனும் அவதானத்துடனும் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

தென் மாகாணத்தில் டெங்கு நோய் பரவலை தடுக்கும் வகையில் நாளை முதல் எதிர்வரும் சனிக்கிழமை 27ஆம் திகதி வரையான காலப்பகுதி ‘டெங்கு ஒழிப்பு’ வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என தென் மாகாண ஆளுநர் விலி கமகே தெரிவித்தார்.

Exit mobile version