Site icon Tamil News

புகைப்பிடிப்பதால் இலங்கையில் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பு

பாடசாலை மாணவர்கள் அதிகளவில் தற்போது சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக கொழும்பு ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய் வைத்தியர் டொக்டர் சந்தன டி சில்வா தெரிவிக்கின்றார்.

உலக புகையிலை எதிர்ப்பு தினம் நாளை (31) அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், கொழும்பில் இன்று (30) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட ஊடகங்களின் தாக்கமே, இதற்கான காரணம் என அவர் கூறுகின்றார்.

நாட்டில் சிகரெட் பாவனையால் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் தகவல் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 பேர் புகைப்பிடிப்பதால் உயிரிழப்பதாக அந்த மையம் சுட்டிக்காட்டுகிறது.

மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிலைத் நிறுவனங்களின் உற்பத்திகளில் இருந்து நமது குழந்தைகளைப் பாதுகாப்பதே இந்த ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் தொனிப்பொருளாகும்.

தற்போது இலங்கையில் சிகரெட் பாவனை 9.1 வீதத்தால் குறைந்துள்ளதுடன் இளைஞர்கள் மத்தியில் சிகரெட் பாவனை வேகமாக குறைந்து வருவதாக மையம் தெரிவித்துள்ளது.

புகையிலை நிறுவன அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டில் சிகரெட் உற்பத்தியும் 19 சதவீதம் குறைந்துள்ளது.

உலகில் சிகரெட் பாவனை குறைவடைந்து வரும் நாடுகளில் இலங்கையில் சிறந்த நிலை காணப்பட்டாலும் இன்னும் சுமார் 1.5 மில்லியன் மக்கள் சிகரெட் பாவிப்பதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் சுட்டிக்காட்டுகிறது.

பன்னாட்டு புகையிலை நிறுவனங்கள் பல விளம்பர உத்திகளை பயன்படுத்தி இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் மனநிலையை மாற்ற முற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version