Site icon Tamil News

உக்ரேனுக்கு சொந்தமான 5 எஸ்யு-27 ரகப் போர் விமானங்கள் அழிக்கப்பட்டன: ரஷ்யா

உக்ரேனுக்குச் சொந்தமான எஸ்யு-27 ரகப் போர் விமானங்கள் ஐந்தை ‘இஸ்கந்தர்-எம்’ ஏவுகணைகளைப் பாய்ச்சி அழித்ததாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) ரஷ்யா கூறியுள்ளது.உக்ரேனின் மத்திய போல்டாவா வட்டாரத்தில் உள்ள மிரோரார்ட் விமானத்தளத்தில் மேலும் இரு போர் விமானங்களை அழித்ததாகவும் அது கூறியது.

விமானத்தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஆனால் ரஷ்யா சேதத்தை மிகைப்படுத்திக் கூறுவதாகவும் உக்ரேன் சொன்னது. சேதம் குறித்த விரிவான தகவலை அது வெளியிடவில்லை.

தாக்குதல் குறித்தக் காணொளியை ரஷ்யத் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. அதில் விமானத்தளத்திலிருந்து புகையும் தீச்சுடரும் மேலெழும்புவதைக் காண முடிகிறது. ஆனால் தாக்குதல் எப்போது நடத்தப்பட்டது என்று அது கூறவில்லை.

அமெரிக்கா வடிவமைத்துள்ள எஃப்-16 ரக விமானத்தைப் பெற்றுக்கொள்ள கியவ் தயாராகிவரும் நிலையில் அதை அழிக்கப்போவதாகச் சூளுரைத்த மாஸ்கோ உக்ரேனிய விமானத்தளங்களைக் குறிவைத்துத் தாக்குகிறது.

“தாக்குதல் நடந்தது. சேதம் ஏற்பட்டது என்றாலும் எதிரிகள் சொல்லும் அளவிற்கு அது பெரிதானது அன்று. படையெடுப்பு தொடங்கியதிலிருந்தே இத்தகைய தாக்குதல்களை ரஷ்யா நடத்திவருகிறது,” என்று உக்ரேனிய விமானப் படை அதிகாரி ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.

வேவு பார்க்கும் ஆளில்லா வானூர்தியை அழிக்கப் போதிய கருவிகள் இல்லை என்று ராய்ட்டர்சிடம் கூறிய அவர், இத்தகைய வானூர்திகள் கடுமையான அச்சுறுத்தலாக விளங்குவதாகக் குறிப்பிட்டார்.

Exit mobile version