Site icon Tamil News

கண் பார்வையை மேம்படுத்தும் 5 எளிய வாழ்க்கை முறைகள்

இன்றைய டிஜிட்டல் யுகத்தின் வேகமான வாழ்க்கை முறையில் கண்பார்வை பாதிப்பும் அதிகரிக்கிறது. கண்சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் குழந்தைகளுக்கு வருவதே சகஜமாகிவிட்டது. இதனை கண்களுக்கு என இருக்கும் பயிற்சிகள், சீரான உணவு உள்ளிட்டவைகள் மூலம் சரிசெய்து கொள்ள முடியும். அதாவது தினசரி பழக்க வழக்கங்கள் மூலம் உங்களின் கண் பார்வையை நீங்கள் மேம்படுத்தலாம். அந்தவகையில் கண்பார்வையை மேம்படுத்த இயற்கையான வழிமுறைகள் என்னென்ன இருக்கின்றன என்பதை பார்க்கலாம்.

கண் பார்வை ஏன் மோசமாகின்றன?

கண் பார்வை ஏன் மோசமாகின்றன என்றால் அதிகமாக செல்போன், கம்ப்யூட்டர் முன்பு நேரத்தை செலவிடுவது, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்ளாமல், மோசமான உணவுகளை சாப்பிடுவது, உடலுக்கு ஏற்ற தண்ணீரை குடிக்காமல் இருப்பது, சரியான தூக்கம் இல்லாமை ஆகியவை மோசமான பார்வைக்கு வழிவகுக்கின்றன. குறிப்பாக 20 அடி தொலைவில் இருக்கும் பொருளை கூட தெளிவாக பார்க்கும் திறன் இல்லாதது மோசமான பார்வை திறனுக்கான அறிகுறியாகும்.

கண் பாதிப்பு அறிகுறிகள்

கண்களில் பாதிப்பு ஏற்பட தொடங்கியவுடன் மங்கலான பார்வை, பிரகாசமான வெளிச்சத்தை பார்க்க முடியாமை, முகங்களை அடையாளம் காண்பதில் சிரமம், கண்கள் சிவத்தல், கண்களில் அரிப்பு மற்றும் அடிக்கடி தலைவலி ஆகியவை கண் பிரச்சனைக்கான சில அறிகுறிகளாகும்.

பார்வையை மேம்படுத்த எளிய பயிற்சிகள் :

1. கண் பயிற்சிகள்

கண்களுக்கு இருக்கும் சில பிரத்யேக பயிற்சிகளை செய்தால் இரத்த ஓட்டம் அதிகரித்து, பலவீனமான கண் தசைகளை வலுப்படுத்த உதவும். மற்ற தசைகளைப் போலவே, உங்கள் கண் தசைகளும் கூர்மையான பார்வையை அடைய பலப்படுத்தப்பட வேண்டும். உங்கள் கண்களை கடிகார திசையில் நகர்த்துவது, தொலைதூரப் பொருட்களைப் பார்ப்பது போன்ற கண் பயிற்சிகள் உங்கள் கண் தசைகளை வலுவாக்கவும், கண் அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும். நீங்கள் கணினியில் பல மணிநேரம் வேலை செய்தால் இந்தப் பயிற்சிகளைச் செய்வது மிகவும் முக்கியம்.

2. தினசரி உடற்பயிற்சிகள்

உங்கள் கண்பார்வை மேம்படுத்த உதவும் மற்றொரு முக்கியமான வாழ்க்கை முறை மாற்றம் வழக்கமான உடற்பயிற்சி ஆகும். வழக்கமான உடற்பயிற்சிகள் மற்ற உடல் பாகங்களைத் தவிர கண்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களின் ஓட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன. நல்ல கண் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உடற்பயிற்சி உதவும்.

3. உணவுமுறை மாற்றங்கள்

உங்கள் கண்பார்வையை மேம்படுத்த மற்றொரு வழி சத்தான உணவை உட்கொள்வது. வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, பச்சைக் காய்கறிகள், கேரட், சிட்ரஸ் பழங்கள், மீன் போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் கண்பார்வையை நன்கு பராமரிக்கலாம்.

4. கேட்ஜெட்டு கட்டுப்பாடு

கண்பார்வை பலவீனமடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று கேஜெட்டுகள் முன்பு அதிக நேரத்தை செலவிடுவது. தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவது கண்பார்வையை பலவீனப்படுத்தும். இதனை பார்ப்பதை கட்டுப்படுத்துங்கள்.

5. வீட்டில் உள்ள விளக்குகள்

வீட்டில் இருக்கும் விளக்குகள் உங்கள் கண் பார்வையை மோசமாக்கலாம். அதனால் கண்களை பாதிக்கும் வெளிச்சம் கொண்டிருக்கும் விளக்குகளை நீக்கவும். வீட்டில் இயற்கையாகவே உங்கள் கண்பார்வையை மேம்படுத்த சீக்கிரம் படுக்கைக்குச் செல்வதும், சீக்கிரமாக எழுந்திருப்பது, சத்தான உணவுகளை உண்பது போன்ற ஆரோக்கியமான விஷயங்களை பின்பற்றினால் உடல் நிச்சயமாக ஆரோக்கியமாக இருக்கும்.

Exit mobile version