Site icon Tamil News

போராட்டத்தின் போது சொத்து சேதம் அடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 1,414 மில்லியன் இழப்பீடு

போராட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களை சேதப்படுத்தியமைக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய நட்டஈடு தொகை 1,414 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

31 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கனவே 714 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி முதல் ஜூலை 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் செயல்களால், அப்போதைய ஆளும் கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், உடைமைகள் எரித்து நாசமாக்கப்பட்டன.

இவ்வாறு சொத்துக்களை சேதப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்க உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள பாராளுமன்ற விவகாரப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 714 மில்லியன் ரூபாவை நட்டஈடாகப் பெற்றுள்ளனர். அத்துடன், மேலும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முழு இழப்பீடு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த 13 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மதிப்பிடப்பட்ட தொகை 700 மில்லியன் ரூபாவாகும்.

இந்த மேலதிக ஏற்பாட்டை பெற்றுக்கொள்வதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நட்டஈடு வழங்குவதற்கு மேலும் 200 மில்லியன் ரூபா தேவைப்படும் என நாடாளுமன்ற விவகாரப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, போராட்டத்தின் போது சொத்துக்கள் அழிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக இல்லாத 73 உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் பிரஜைகளுக்கு 519 மில்லியன் ரூபா நட்டஈடாக அரசாங்கம் வழங்கியுள்ளது.

 

Exit mobile version