Site icon Tamil News

மியன்மார் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 11 பேர் பலி!

மியன்மார் ராணுவம் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ‌‌‌ஷான் மாவட்டத்தில் நடத்திய வான்வழி தாக்குதலில் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கிளர்ச்சியாளர்கள் வெள்ளிக்கிழமையன்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை நள்ளிரவுக்குப் பின் 1 மணிவாக்கில் நம்காம் நகரில் உள்ள இரண்டு பகுதிகளில் ராணுவம் குண்டு போட்டதாக ‘டிஎன்எல்ஏ’ கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

ராணுவத் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாகவும் 11 பேர் காயமடைந்ததாகவும் கிளர்ச்சியாளர்கள் கூறினர். உள்ளூர் அரசியல் கட்சியின் அலுவலகம் ஒன்று தரைமட்டமானது.உயிரிழந்தவர்களில் ஐவர் ஆண்கள், நான்கு பெண்கள், இரண்டு குழந்தைகள்.

தாக்குதல் நடத்தப்பட்ட நம்காம் நகரம் சீனாவின் யுனான் மாநிலத்திற்கு மிக அருகில் உள்ளது. 2023ஆம் ஆண்டு முதல் ‘டிஎன்எல்ஏ’ கிளர்ச்சியாளர்கள் அந்த நகரத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

தாக்குதல் தொடர்பான காணொளிகளும் படங்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. மியன்மார் ராணுவம் இது குறித்து எந்தத் தகவலும் வெளியிடவில்லை.

2021ஆம் ஆண்டு மியன்மாரில் ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியது. அதன் பின்னர் அங்குள்ள கிளர்ச்சியாளர்களை ஒழித்துக்கட்ட ராணுவம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.இதில் ராணுவ வீரர்கள் பொதுமக்கள் மீதும் சரமாரியாகத் தாக்குதல் நடத்துவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

Exit mobile version