Site icon Tamil News

வான்வெளி தாக்குதல் நடத்திய ராணுவப்படை… 50 பேர் பலி – கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா

மியான்மர் நாட்டில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக  போராடியவர்கள் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியதில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மியான்மர் நாட்டில் கடந்த 2021 பிப்ரவரி முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் பலரும் அவர்களுக்கு எதிராக கடுமையான போராட்டம் நடத்தி வருகின்றனர்.அந்நாட்டு அரசு இந்த போராட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து அடக்கு முறையை நடத்துகிறது. இருந்தும் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது.

இந்த நிலையில் சாஜேங் பகுதியிலுள்ள பஷி கியீ என்ற கிராமத்தில் முகாமில் தங்கியிருந்த போராளிகள் மீது நேற்று காலை சரியாக எட்டு மணிக்கு அந்நாட்டு ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது.இதில் அங்கு நடைபெறவுள்ள விழாவில் நடனமாட வந்திருந்த பள்ளி சிறுவர், சிறுமிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

“முகாமில் தங்கியிருந்தவர்கள் மீது திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் மக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர்.  சாதாரண போராளிகள் போல உடையணிந்து வந்த பல ராணுவ வீரர்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்தினர்” என அங்கிருந்த போராளி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த கோர நிகழ்விற்கு எதிராக ஐ.நா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. “இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல், பொதுமக்களை கொன்று குவிப்பதை மியான்மர் அரசு இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என கூறியுள்ளது.மேலும் ராணுவ படையினரால் உயிரிழந்த மக்களுக்கு தனது இரங்கலை ஐ.நா தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து பயங்கரமான வன்முறையை நிறுத்தவும், தடையற்ற மனிதாபிமான அணுகலை அனுமதிக்கவும், மியான்மர் மக்களின் உண்மையான மற்றும் உள்ளடக்கிய ஜனநாயக அபிலாஷைகளை மதிக்கவும் மியான்மர் ஆட்சிக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவதை அடுத்து 100 பேருக்கு மேல் இறந்திருப்பார்கள் என தெரிய வந்துள்ளது.ராணுவ ஆட்சி தொடங்கப்பட்டதிலிருந்து மக்களது போராட்டத்தின் அடக்குமுறைக்கு எதிராக கிட்டதட்ட 3100 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Exit mobile version