Site icon Tamil News

மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு தயாராகும் xian நகரம்: கண்டனம் தெரிவித்த மக்கள்

சீனாவில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், 13 மில்லியன் மக்கள் தொகை கொண்ட முக்கிய நகரம் ஒன்று மீண்டும் கடுமையான நடைமுறைக்கு உள்ளாகக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் Xian நகர அதிகாரிகள் அவசர நடவடிக்கையின் ஒருபகுதியாக பாடசாலைகள், வணிகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக புழங்கும் பகுதிகளை ஊரடங்கு நடவடிக்கையில் கொண்டுவர திட்டமிட்டு வருகின்றனர்.Xian நகரில் திடீரென்று காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளதே முதன்மை காரணமாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, சீனா முழுவதும் அதிகரித்துவரும் காய்ச்சல் பாதிப்பால், மருந்தகங்களில் அவசரத் தேவைக்கான மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

சீனாவில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அமுலில் இருந்த கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜனாதிபதியால் தளர்த்தப்பட்டு சில மாதங்களேயாகியுள்ள நிலையில், தற்போது காய்ச்சல் காரணமாக மீண்டும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மக்களை தள்ள Xian நகர நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.

ஆனால் தேவை இருந்தால் மட்டுமே ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என Xian நகர நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இருப்பினும், நகர நிர்வாகத்தின் இந்த அறிவிப்புக்கே பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தற்போதுள்ள நிலைமையை நகர நிர்வாகத்தின் இந்த திட்டமிடல் மோசமடைய செய்யும் என விமர்சித்துள்ளனர்.

சில அதிகாரிகளுக்கு மக்களை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவது என்பது பொழுதுபோக்கு போல இருக்கிறது என உள்ளூர் மக்கள் சிலர் கொந்தளித்துள்ளனர்.கொரோனா ஊரடங்கின் போது Xian நகர மக்கள் தங்கள் குடியிருப்பில் இருந்தே வெளியேற தடை விதிக்கப்பட்டனர். மட்டுமின்றி உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் முடியாமல் போனது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்றே அப்போதைய நிலை குறித்து நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version