Site icon Tamil News

மறுபடியும் மீண்டெழுவோம் – நாமல் ராஜபக்ச சூளுரை

ராஜபக்‌ஷக்கள் மீண்டும் ஆட்சிப்பீடக் கதிரைகளில் அமர்வார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ராஜபக்‌ஷக்கள் சதித் திட்டங்களால் வீழ்ந்த வரலாறும் உண்டு. அவர்கள் மக்கள் ஆணையுடன் மீண்டெழுந்த வரலாறும் உண்டு. எனவே, ராஜபக்‌ஷக்கள் மீண்டும் ஆட்சிப்பீடக் கதிரைகளில் அமர்வார்கள். மக்கள் ஆணையுடன்தான் அது நடக்கும்.”

அதிபர் வேட்பாளர் விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் மார்தட்டிக்கொண்டு வீர வசனங்கள் பேசுகின்றனர்.

ஆனால், அதிபர் வேட்பாளர் தொடர்பில் மொட்டுக் கட்சி இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை. எமது கட்சிக்குள் இருந்துகொண்டு சிலர் தனிப்பட்ட ரீதியில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு கட்சியின் தலைமை பொறுப்பு அல்ல.

ராஜபக்‌ஷக்கள் குடும்பத்தினரின் மீளெழுச்சிக்கு மக்கள் எவரும் இடமளிக்கக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரின் இந்தக் கருத்து சிறுபிள்ளைத்தனமானது. கடந்த அதிபர் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் மண்கவ்வியதை மறந்து விட்டார் போல, அதிபர் பதவிக்கும், பிரதமர் பதவிக்கும் ஆசைப்பட்டு இறுதியில் தோற்றுப்போன சஜித் பிரேமதாஸவுக்கு ராஜபக்‌ஷக்களை விமர்சிக்கவோ அல்லது மொட்டுக் கட்சியை விமர்சிக்கவோ எந்த அருகதையும் கிடையாது.

ஏதாவது ஒரு தேர்தலில் வென்று காட்டிவிட்டு எம்மை விமர்சியுங்கள் என்று சஜித்திடம் நான் கேட்டுக்கொள்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version