Tamil News

புதிய புலம்பெயர்தல் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு ; பிரித்தானிய நாடாளுமன்றம் முன் திரண்ட நூற்றுக்கணக்கானோர்

புதிய புலம்பெயர்தல் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நூற்றுக்கணக்கானோர் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கம் முன் திரண்டார்கள்.

பிரித்தானிய அரசு, பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் புலம்பெயர்வோருக்கெதிராக புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளது.அது தொடர்பான மசோதா ஒன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உள்துறைச் செயலர் சுவெல்லா பிரேவர்மேனால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், மசோதா மீதான விவாதம் துவங்கியுள்ளது.

அந்த சட்டம், பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் புலம்பெயர்வோரை ஜாமீனில் வரமுடியாத வகையில் கைது செய்து, நாடு கடத்தவும், அப்படி நாடுகடத்தப்பட்டவர்கள் மீண்டும் பிரித்தானியாவில் கால்வைக்க அனுமதி மறுக்கவும் வகை செய்கிறது.இந்த கொடுமையான சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்ற சதுக்கம் முன் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

புதிய புலம்பெயர்தல் மசோதாவில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள், நாஸி ஜேர்மனியை நினைவூட்டுவதாக இருப்பதாக, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், கடும் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் ஆளாகியுள்ள இந்த மசோதா, அகதிகள் ஒப்பந்தத்தை மீறும் ஒரு நடவடிக்கை என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளதுடன், அது போர் மற்றும் துன்புறுத்தலுக்கு தப்பியோடிவரும் மக்களை பிரித்தானியாவில் அடைக்கலம் பெறுவதிலிருந்து தடுக்கும் என்றும் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version