Site icon Tamil News

பாடசாலைப் புத்தகங்களுக்கான இந்திய ஆதரவு இலங்கையின் சிறந்த எதிர்காலத்துக்கான முதலீடு

இலங்கையின் பல்வேறு பாகங்களிலுமுள்ள பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களின் பயன்பாட்டுக்காக, இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் அரச அச்சக கூட்டுத்தாபனத்தில் அச்சிடப்பட்ட பாடசாலைப் புத்தகங்களின் விநியோகப்பணிகளை இலங்கையின் கல்வி அமைச்சர் டாக்டர் சுசில் பிரேமஜயந்த மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர்  கோபால் பாக்லே ஆகியோர் இணைந்து 2023 மார்ச் 09 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தனர்.

கல்வி இராஜாங்க அமைச்சர்  அ.அரவிந்த குமார் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் திரு.நிஹால் ரணசிங்கே உள்ளிட்ட அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உணவு, எரிபொருள், மருந்துப்பொருட்கள் மற்றும் உற்பத்தித் துறை சார்ந்த மூலப்பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்காக 2022 மார்ச்சில் இந்திய அரசாங்கத்தால் இலங்கை அரசுக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடன் வழங்கப்பட்டது. இந்த கடனுதவியின்கீழ் அச்சிடல் காகிதம் மற்றும் ஏனைய மூலப்பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்காக அரச அச்சகக் கூட்டுத்தாபனமும் ஏனைய தனியார் நிறுவனங்களும் 10 மில்லியன் அமெரிக்க டொலரை பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2023 கல்வி ஆண்டிற்காக 4 மில்லியன் மாணவர்களுக்கு தேவைப்படும் பாடசாலைப் புத்தகங்களில் 45 வீதமானவற்றை இந்த உதவியை பயன்படுத்தி அச்சிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version