Site icon Tamil News

நெடுந்தீவு கொலை சம்பவம் : நகைகளுக்காக கொலை செய்தேன் – சந்தேகநபர் அதிர்ச்சி வாக்குமூலம்!

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 26 தங்கப் பவுண் நகைகள்,  ஆடைகள் மற்றும் அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் சடலங்கள் மீட்கப்பட்டன.  100 வயது மூதாட்டி ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுல செனரத்தின் கட்டளையில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் விஷாந்தின் வழிகாட்டலில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போதே புங்கடுதீவில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றில் குற்றவாளியாகக் கண்டறிந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு 51 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் வழங்கிய குறித்த நபர்,  நான் நெடுந்தீவு வந்தால்  குறித்த வயோதிபர்களின் வீட்டில்தான் தங்கிச் செல்வேன். அதுபோன்று கடந்த சில தினங்களுக்கு முன் வந்து தங்கியிருந்தேன்.

அங்கு வெளிநாட்டிலிருந்து வந்திருந்தவர்கள் நகைகள் அணிந்திருந்தனர். அனைவரது நகைகளையும் அபகரித்து விற்பனை செய்து வரும் பணத்தில் கடவுச்சீட்டு பெற்று நான் மீளவும் ஜேர்மனிக்கு செல்ல திட்டமிட்டேன்.

அதனால் 22 ஆம் திகதி அதிகாலை 4.30 பின்னர் நித்திரையிலிருந்த அனைவரையும் கொலை செய்துவிட்டு நகைகளை எடுத்துக்கொண்டு தப்பிக்க எண்ணினேன்.

நகைகளை மட்டும் அபகரித்துச் சென்றால் பொலிஸார் எளிதில் பிடித்துவிடுவார்கள். அதனால் பொலிஸ் விசாரணையை திசை திருப்ப அனைவரையும் கொலை செய்தேன் என்று சந்தேக நபர் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version