Site icon Tamil News

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இலங்கைப் பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழலுக்கு எதிரான சட்டத்தை இலங்கை பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

குறித்த சட்டமூலத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாகவும் தெரிவித்தார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்பு நாம் வங்குரோத்து நாடாக மாறினோம். IMF மற்றும் எங்கள் கடன் வழங்குநர்களின் ஆதரவுடன் நாங்கள் எங்கள் கடனை மறுசீரமைக்க வேண்டியேற்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இது வெறும் ஆரம்பம் தான். IMF ஆதரவு தொடர்பில் நிதி உத்தரவாதத்தைப் பெற்ற பிறகு, நம் நாடு வங்குரோத்து நாடாக கருதப்படமாட்டாது. இப்போது நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்.

அதாவது பலதரப்புக் கடன் வழங்குநர்கள் மற்றும் இருதரப்புக் கடன் வழங்குநர்கள் அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினம். ஆனால் நாம் திரும்பிப் பார்க்காமல் நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும்

எனவே இது முடிவல்ல. ஒருபுறம், இது ஆரம்பம் மட்டுமே. அடுத்ததாக கடன் தருபவர்களுடனும் கலந்துரையாட வேண்டும்.

கடன் வழங்குபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதே நேரம், எமக்கு நான்கு வருட வேலைத்திட்டமும் உள்ளது. அதனால்தான் இந்த ஒப்பந்தத்துக்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

நான் அதை சட்டப்படி செய்ய விரும்பவில்லை. ஆனால் பாராளுமன்றத்தில் இந்த உடன்படிக்கைக்கு வாக்களிப்பது எங்களை மேலும் பலப்படுத்துகிறது. இதற்கு மக்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version