Site icon Tamil News

சர்வதேசத்தை ஏமாற்றும் இலங்கை : பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம்!

சர்வதேச சமூகத்தை ஏமாற்றவே இலங்கை உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்த முயல்கிறது என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

தமிழ்மக்களின் இனப்படுகொலை யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் செயற்பாடுகள் மிக முக்கியமான கட்டத்தை அடைந்துகொண்டிருக்கும் தருணத்தில் இலங்கை தென்னாபிரிக்க பாணியை பின்பற்ற முயல்கின்றது எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை விமர்சித்துள்ளது.

தென்னாபிரிக்க பாணியை இலங்கை பின்பற்றினால் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களிற்கு தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை இலங்கை மேலும் பல வருடங்களிற்கு தொடரமுடியும் எனவும் குறித்த பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் அரசியல் வரலாற்றை அறிந்தவர்களிற்கு குறிப்பாக சீருடை மற்றும் காவி உடை அணிந்தவர்களின் குற்றங்களை பாதுகாக்கும் இலங்கை அரசாங்கத்தின் வரலாற்றை அறிந்தவர்களிற்கு இலங்கை அரசாங்கத்தின் இந்த வகையான சூழ்ச்சிகள் புதியவை இல்லை எனவும் பிரித்தானியதமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இலங்கையின் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கும் கலாச்சாரம்  மற்றும் பேரினவாத பௌத்த மதகுருமாரை பாதுகாப்பது குறித்த அதன் வரலாறு சுயவிளக்கமளிக்கும் விதத்தில் காணப்படுகின்றது எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

Exit mobile version