Site icon Tamil News

இலங்கையில் அதிகரிக்கும் காசநோயாளர்கள் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் வருடாந்தம் சுமார் 10,000 காசநோயாளிகள் கண்டுபிடிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காசநோயாளிகள் சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ளாதுவிட்டால் மரணம் கூட நேரிடும் என்றும் சுவாச நோய் தொடர்பான நிபுணர் டாக்டர் போதிக சமரசேகர கூறியுள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், காசநோய் காற்றினால் பரவும் நோய் என்பதால் சிகிச்சை எடுக்காமல் இருப்பது ஆபத்தானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தில் நுரையீரல் காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் ஆரோக்கியமான மக்களுக்கு இந்த நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தகைய நோயாளிகள் இருமல், தும்மல், சிரிப்பு மற்றும் பேசும் போது நச்சுத் துணிக்கைகள் கொண்ட சளியின் துளிகளை சுவாசிப்பதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படுவதாக கூறப்படுகின்றது.

இரண்டு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இருமல், இரவில் லேசான காய்ச்சல், உடல் எடை குறைதல், இரவில் அதிக வியர்த்தல், பசியின்மை, சளியுடன் ரத்தம் வெளியேறுதல் ஆகியவை காசநோயின் முக்கிய அறிகுறிகள் ஆகும்.

இந்த அறிகுறிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் இருந்தால், காசநோய் எதிர்ப்பு இயக்கத்தின் மருத்துவர்கள், அருகிலுள்ள மார்பு மருத்துவ மனை அல்லது சளி பரிசோதனை ஆய்வகத்திற்கு விரைவில் சென்று இலவச சளி பரிசோதனை செய்து கொள்ளுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version