Site icon Tamil News

இனி பல்கலைக்கழக மாணவர்களுக்கு மனநலப் பரிசோதனை!

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்கும் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள மாணவர்கள் இனிமேல் மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர்டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்திலும் முகாமைத்துவ பீடத்திலும் இவ்வருடத்திற்கான மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 5 வீதமானவர்கள் அந்த மாணவர்களின் மனநலப் பரிசோதனையில் மனநல சிகிச்சை பெற வேண்டும் என்ற நிலையில் இருப்பதாகவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்துக்களை நேற்று (12) பேராதனைப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம். டி. லமாவங்ஷ தலைமையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்கப்படும் அனைத்து மாணவர்களும் தற்போது உடல் தகுதிப் பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் இது தவிர மாணவர்களின் மனநலப் பிரச்சினைகளும் இந்த மனநல மருத்துவப் பரிசோதனையின் மூலம் கண்டறியப்படுவதாகவும் பிரதி உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில் பல்கலைக்கழக ஆட்சி அதிகாரத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version