Site icon Tamil News

ரஷ்யாவின் மத்திய வங்கி நிதிகளை முடக்க வேண்டும்; உலக வங்கிக்கு ஜெலன்ஸ்கி வேண்டுகோள்

உக்ரைனுக்கு எதிராக கடந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில், ரஷ்யா படையெடுத்தது. இந்த போரானது, ஓராண்டுக்கும் மேலான நிலையில், முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. பலரை பலி வாங்கிய இந்த போரில் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டு வருகின்றன.

ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை விதித்து வருகின்றன. உக்ரைனுக்கு வேண்டிய நிதி, ஆயுத உதவிகளையும் செய்து வருகின்றன. எனினும், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி பேச்சுவார்த்தை உள்ளிட்ட பிற முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. உக்ரைனின் பாக்முத் நகரை கைப்பற்றி, ரஷ்ய கொடியும் சமீபத்தில் நாட்டப்பட்டது. இதனால், போரில் ரஷ்ய தரப்பில் முன்னேற்றம் காணப்படுகிறது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றில் பேசும்போது, சர்வதேச நாணய நிதியகம் மற்றும் உலக வங்கிகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள ரஷ்யாவின் மத்திய வங்கியின் சொத்துகள், நிதிகளை முடக்க வேண்டும் என்றும் அவற்றை கொண்டு உக்ரைனை மறுகட்டமைப்பு செய்ய உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

உக்ரைனில் ஏற்பட்டு உள்ள இழப்புகளை ஈடுகட்டுவதற்காக இந்த நடவடிக்கையை ரஷ்யாவுக்கு எதிராக எடுக்கும்படி அவர் கேட்டு கொண்டு உள்ளார். ரஷ்யா தனது அராஜகத்திற்கான முழு விலையையும் உணர வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அந்த வீடியோவில் பேசியுள்ளார். தொடர்ந்து அவர் வீடியோவில் பேசும்போது, ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள், ரஷ்யாவின் வெளிநாட்டில் உள்ள 6 ஆயிரம் கோடிக்கும் கூடுதலான அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துகளை முடக்கும் என அறிவித்தது.

ரஷ்ய நிறுவனங்களுக்கு எதிரான தடை நடவடிக்கைகளும் தொடர்ந்தன. ரஷ்ய அதிபர் புதினுடன் தொடர்புடைய பணக்காரர்களுக்கு எதிராகவும் தடை விதிக்கப்பட்டன. இதேபோன்று ரஷ்யாவின் மத்திய வங்கியும் முடக்கப்படுவது பற்றி தெளிவாக குறிப்பிட வேண்டும். உலக அளவில் அது அமைதி உருவாக்கும் ஒரு நடவடிக்கையாக அமையும் என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

Exit mobile version