Site icon Tamil News

இலங்கையின் கடன்மறுசீரமைப்புச் செயன்முறையில் அனைத்து தரப்பினரும் பங்கெடுக்க வேண்டும் – சீனா வலியுறுத்தல்!

சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பானது தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்குப் பெரிதும் உதவும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின், கடன்சுமையை நியாயமான முறையில் பகிரும் கோட்பாட்டுக்கு அமைவாக இலங்கையின் கடன்மறுசீரமைப்புச் செயன்முறையில் அனைத்து வர்த்தக மற்றும் பல்தரப்புக் கடன்வழங்குனர்களும் பங்கெடுத்துக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தினார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், இலங்கையின் கடன்நெருக்கடியை உடனடியாகவும், செயற்திறனாகவும் கையாள்வதற்கு அவசியமான நிதியியல் உத்தரவாதத்தை சீன ஏற்றுமதி-இறக்குமதி வங்கி வழங்கியதாகச் சுட்டிக்காட்டினார்.

இது கடன் உறுதிப்பாட்டை அடைந்துகொள்வதற்கு இலங்கைக்கு உதவவேண்டும் என்பதில் சீனா கொண்டிருக்கும் முனைப்பையே காண்பிக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை சம்பந்தப்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும், தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கும், சீனா தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு கடன்சுமையை நியாயமான முறையில் பகிரும் கோட்பாட்டுக்கு அமைவாக இலங்கையின் கடன்மறுசீரமைப்புச்செயன்முறையில் அனைத்து வர்த்தக மற்றும் பல்தரப்புக் கடன்வழங்குனர்களும் பங்கெடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் அவர் அழைப்புவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version